முகப்பு

சனி, 18 செப்டம்பர், 2010

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை

அடிப்படை விளக்கம்

அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும் என்பதின் விளக்கம் என்னவென்றால் அல்லாஹ் தன்னைக் குறித்து அல்குர்ஆனில் கூறியிருக்கும் தன்மைகள் (ஸிஃபத்துகள்) செயல்கள் அனைத்தும் உண்மையே என நம்புவதாகும். அந்தத் தன்மைகளையும் செயல்களையும் கொண்டுதான் அல்லஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும். அத்துடன் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி கூறியுள்ள தன்மைகளையும், செயல்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்குர்ஆனிலும் ஆதாரமிக்க நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளதில் நமது அறிவைக் கொண்டு கருத்து, பொருள் மாற்றத்தையோ செய்யக்கூடாது.

அவனுடைய தன்மைகளுக்கும் செயல்களுக்கும் படைப்பினங்களின் தன்மைகளையும் செயல்களையும் உதாரணமாக உவமையாக கூறக்கூடாது.

படைப்பினங்களின் தன்மைகளைக் கொண்டும் செயல்களைக் கொண்டும் அல்லாஹ்வின் தன்மைகளையும் செயல்களையும் விவரிக்கக் கூடாது.

அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள் பற்றி கூறப்பட்டுள்ள குர்ஆனின் வசனங்களை பொருளற்றவை என்று கூறக்கூடாது.

அல்லாஹ் தன்னைப்பற்றி அல்குர்ஆனில் கூறியிருக்கும் வசனத்திற்கேற்ப அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும்.

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

..... அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை அவன் (யாவற்றையும்) செவியுறுபவனாகவும்) உற்று நோகியவனாகவும் இருக்கிறான். (ஸுரா அஷ்ஷுறா 42:11)

இதன் அடிப்படையில் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறியிருக்கும் எந்த தன்மைகளையும் அவை அவனுக்கு இல்லை என்று மறுக்கக் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களை மாற்றக் கூடாது. அவைகளை புரட்டி, திருத்தி மாற்றுப் பொருள் கூறவும் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களிலும் அவனது அழகிய திருப்பெயர்களிலும் முரண்பட்ட பொருளை புகுத்தக்கூடாது. எந்நிலையிலும் அல்லாஹ்வின் தன்மைகளுக்கு படைப்பினங்களின் தன்மைகளை உவமையாக கூறக் கூடாது.

நிச்சயமாக அல்லாஹ்விற்கு நிகரானவர் எவரும் இல்லை. அவனுக்கு சமமானவரும் எவரும் இல்லை. அவனுடைய தன்மையைப் பெற்றவரும் எவருமில்லை. அல்லாஹ்வை அவனது படைப்பினங்களைக் கொண்டு கணித்துவிடக் கூடாது. கணித்துவிடவும் முடியாது. அல்லாஹ் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் மிக அறிந்தவன். அவன்தான் முற்றிலும் உண்மையை உரைப்பவன். அவனது படைப்பினங்கள் அனைத்தையும் விட அவன்தான் மிக அழகிய முறையில் பேசுபவன். ஆகவே அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் அனைத்தும் சரியானைவையும், உண்மையானவையுமாகும். அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் தன்மைகளுடன்தான் நாம் அவனை ஈமான் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அவனது தூதர்கள் அனைவரையும் உண்மையாளர்கள் என்றும் அல்லாஹ்வால் மெய்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் நம்பிக்கைக் கொள்ளவேண்டும். ஆகவே இறைத்தூதர்கள் அல்லாஹ்வைப் பற்றி கூறியுள்ள அழகிய தன்மைகள் அனைத்தும் அவனுக்கு உரியனவே என ஈமான் கொள்ள வேண்டும். அல்லாஹ்வைப் பற்றி உறுதியான ஆதாரமும், தெளிவான அறிவுமின்றி பேசுபவர்களின் வழிமுறையை நாம் பின்பற்றக் கூடாது. இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக. இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்.

இவ்வசனங்களிலிருந்து நாம் விளங்க வேண்டியவை என்னவெனில்:
1. இறைத்தூதர்களுக்கு முரண்பட்டு அல்லாஹுவை பற்றி வர்ணிப்பவர்களின் வர்ணணைகளை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

2. இறைத்தூதர்கள் அல்லாஹுவை பற்றி கூறுவது அனைத்தும் எல்லாக் குறைகளை விட்டும் தவறுகளை விட்டும் பாதுகாக்கப்பட்டது. எனவேதான் அவர்களுக்கு அவனது அருளும் பாதுகாப்பும் உண்டு என வாக்களிக்கின்றான்.

3. அல்லாஹ் அவனுக்கு வைத்துக் கொண்ட பெயர்களிலும், அவன் வர்ணிக்கும் அவனது அழகிய பண்புகளிலும் அவன் கூறும் முறை என்னவெனில், அவன் தனக்கு தகுதியற்றதை தன்னிடம் இல்லையென்றும், தனக்கு தகுதியானதை தனக்கு இருக்கின்றது என்றும் கூறுகின்றான்.

எனவே, நபிவழியையும் நபித்தோழர்களையும் பின்பற்றும் நன்மக்கள் எந்நிலையிலும் அல்லாஹ்வின் தூதர்கள் கற்றுக் கொடுத்த இறைக் கொள்கையிலிருந்தும், ஈமானிய வழியிலிருந்தும் திரும்பிடக் கூடாது. நிச்சயமாக இதுவே மிக நேரான வழியாகும். இது அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள் .இறைத்தூதர்கள், "ஸித்தீக்' என்ற உண்மையாளர்கள், "ஷஹீத்' என்ற இறை பாதையில் உயிர்நீத்த தியாகிகள், "ஸôலிஹ்' என்ற நல்லோர்கள் ஆகியோரின் வழியாகும்.

அல்லாஹ் தன்னைப்பற்றி வர்ணித்துள்ள வசனங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த, திருக்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமானது என்று கூறப்பட்ட சூரத்துல் இக்லாஸ் இக்கருத்தைத்தான் உறுதிப்படுத்துகிறது.

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُلَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவருடைய) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.அன்றியும், அவனுக்கு நிகராகவும் ஒன்றுமில்லை. (ஸூரா அல்இக்லாஸ் 112:1-4)

மேற்கூறப்பட்ட திருவனங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவைகள்:

1) அல்லாஹ் என்ற வார்த்தை அகிலத்தைப் படைத்து பரிபாலித்து இரட்சித்து வரும் ஏக இறைவனுக்குரிய பெயராகும். இது "இலாஹ்' என்ற பதத்திலிருந்து வந்ததாகும். இதன் பொருள் "உண்மையில் வணக்கத்திற்கு தகுதியானவன்' என்பதாகும்.

2) அல்லாஹ் ஏகனே. அவனது உள்ளமை, அவனது பெயர்கள், அவனது தன்மைகள், அவனது செயல்கள் அனைத்திலும் அவனுக்கு இரண்டாமவர் இல்லை, அவனுக்கு நிகரானவர் இல்லை, அவனுக்கு ஒப்பானவர் இல்லை.

3) அஸ்ஸமது (தேவையற்றவன்) என்ற வார்த்தையின் பொருளாவது "தனது ஆட்சி, அறிவு, கண்ணியம், சிறப்பு அனைத்திலும் அவன் பூரணமானவன். அவன் யாருடைய தேவையுமற்றவன், அவனைத் தவிர யாவரும் அவன்பால் தேவையுடையவர்களே.

4) அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அதாவது அவன் யாருடைய தகப்பனுமல்ல. அவன் எவருக்கும் பிறந்தவனுமல்ல. அதாவது அவன் எவரின் பிள்ளையுமல்ல. அவன் முற்றிலும் படைப்பினங்களுக்கு அப்பாற்பட்டவன். அவனே முந்தியவனும் முதலாமவனுமாவான். படைப்பினங்களை விட்டும் படைப்பினங்களின் தன்மையை விட்டும் முற்றிலும் தூய்மையானவன்.

5) ஆகவே, அவனுக்கு நிகராக எவருமில்லை. அவனைத் தவிர அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையே. அந்த படைப்பினங்களில் எதுவும் அவனுக்கு சமமாகவோ நிகராகவோ ஒப்பானதாகவோ இல்லவே இல்லை. அல்லாஹ்தான் பூரணமானவன்.

இவ்வாறே திருக்குர்ஆனின் மிக மகத்தான வசனம் என்று வர்ணிக்கப்பட்ட "ஆயத்துல் குர்ஸி' என்ற பின்வரும் வசனமும் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلۡحَىُّ ٱلۡقَيُّومُ‌ۚ لَا تَأۡخُذُهُ ۥ سِنَةٌ۬ وَلَا نَوۡمٌ۬‌ۚ لَّهُ ۥ مَا فِى ٱلسَّمَـٰوَٲتِ وَمَا فِى ٱلۡأَرۡضِ‌ۗ مَن ذَا ٱلَّذِى يَشۡفَعُ عِندَهُ ۥۤ إِلَّا بِإِذۡنِهِۦ‌ۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ‌ۖ وَلَا يُحِيطُونَ بِشَىۡءٍ۬ مِّنۡ عِلۡمِهِۦۤ إِلَّا بِمَا شَآءَ‌ۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَـٰوَٲتِ وَٱلۡأَرۡضَ‌ۖ وَلَا يَـُٔودُهُ ۥ حِفۡظُهُمَا‌ۚ وَهُوَ ٱلۡعَلِىُّ ٱلۡعَظِيمُ

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்காது, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.

மேற்கூறப்பட்ட திருவசனத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவை:

1) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குரியவன் இல்லை. எனவே அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது. அல்லாஹ்விற்கு செய்யும் வணக்க வழிபாடுகளை அவனைத் தவிர வேறு யாருக்கும் செய்யக்கூடாது.

2) அவனே என்றென்றும் உயிருள்ளவன்; நிலையானவன். அவனைத் தவிர இவ்வுலகத்தில் உள்ள அனைத்து வஸ்துக்களும் அழியக்கூடியவையே ஆகும். அவனுக்கு மரணமுமில்லை, சிறு தூக்கமுமில்லை. அவன் எந்நேரமும் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்தவனாகவே இருக்கின்றான். வானங்களில் உள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே சொந்தமானவை. ஏனெனில் அவனே அவைகளை படைத்தான். அவைகளை படைக்கும் விஷயத்தில் அவனுக்கு வேறு எந்த உதவியாளரும் இல்லை. அவ்வாறே படைப்பினங்களை நிர்வகிப்பதிலும் அவனே முழு அதிகாரம் பெற்றவன்.

3) அவன் அனுமதி கொடுக்காமல் எவரும் எவருக்கும் சிபாரிசு செய்ய முடியாது. படைப்பினங்கள் எவ்வளவுதான் அந்தஸ்தில் உயர்ந்தாலும் அவைகள் அல்லாஹ்வின் அடிமைகளே. அல்லாஹ்வே அனைத்தையும் அடக்கி ஆளும் அகிலங்களின் அனைத்தின் அரசனாக இருக்கின்றான். அவனிடம் எவரும் துணிவு கொள்ளவோ அதிகாரம் செலுத்தவோ அவனை நிர்பந்திக்கவோ முடியாது. எவரும் அல்லாஹ்விடத்தில் தனக்குரிய அந்தஸ்தைக் கொண்டு தான் விரும்பியவர்களுக்கெல்லாம் அவனிடம் பரிந்துரை செய்யலாம் என்று துணிந்துவிட முடியாது. மாறாக, பரிந்துரை செய்வதற்கும், யாருக்காக பரிந்துரை செய்யலாம் என்றும் அல்லாஹ் அனுமதி வளங்க வேண்டும். அப்போதுதான் பரிந்துரையையும் அவன் ஏற்றுக் கொள்வான்.

4) அல்லாஹ்வின் அறிவே முழுமையானது. அல்லாஹ் எதையும் அவன் நாடிய அளவே படைப்பினங்கள் அறிந்து கொள்ள முடியும். படைப்பினங்களின் அறிவு முழுமையானதல்ல!.

5) அவன் தன் படைப்பினங்களை விட்டும் உயர்ந்தவன், மகத்தானவன். ஏழு வானங்களுக்கு மேல் அவன் அமைத்திருக்கும் "குர்ஸி" ஏழு வானங்களை விடவும் ஏழு பூமிகளை விடவும் மிக விசாலமானது என்று அவன் கூறியதிலிருந்து அவனது மகத்தான ஆற்றலையும் மாபெரும் வல்லமையையும் விளங்கிக் கொள்ளலாம்.

6) வானங்கள் பூமிகளை படைத்தது அவனுக்கு இலகுவானதே. அதில் எவ்வித சிரமமோ அவனுக்கு இல்லை. அவ்வாறே அதில் கோடானக் கோடி படைப்பினங்களை படைத்ததும் அவனுக்கு சிரமமானதல்ல. வானங்களையும் பூமிகளையும் அதிலுள்ள அனைத்து படைப்பினங்களையும் பாதுகாப்பதும் இரட்சிப்பதும் நிர்வகிப்பதும் அவனுக்கு மிக இலகுவானதே. அவன் அத்தகைய மாபெரும் ஆற்றலும் சக்தியும் படைத்தவன்.

"குர்ஸி என்பது அல்லாஹ்வுடைய பாதத்தின் ஸ்தலமாகும்'' என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. (முஸ்தத்ரகுல் ஹாகிம், முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரகுத்னி, முஃஜமுத் தப்ரானி, ஸஹீஹ் இப்னு குஜைமா.)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் இரவில் இவ்வசனத்தை ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலர் இருப்பார். காலை வரை ஷைத்தான் அவரை அணுகமாட்டான். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒருவர் ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பின்பும் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அவர் சுவனம் நுழைய மரணத்தைத் தவிர வேறெந்த தடையும் இல்லை. (ஸூனனுன் நஸôயீ, அஸ்ஸில்ஸலத்துல் ஸஸீஹா)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி வர்ணித்து இருக்கும் அனைத்து தன்மைகளையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் திருக்குர்ஆனின் விளக்கவுரை களாகும். ஆகவே நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிஞர்களால் ஏற்று கொள்ளப்பட்ட உறுதிமிக்க, சரியான (ஸஹீஹ்) ஹதீஸ்களில் வந்துள்ள அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள், பண்புகள் அனைத்தும் அவனுக்கு உண்டு என நாம் ஈமான் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம் உள்ளன. பார்க்க 4:13, 4:80, 4:59, 33:36.

அல்லாஹ்வின் அழகிய பண்புகளை விவரிக்கும் அல்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள்

அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்

هُوَ ٱلۡأَوَّلُ وَٱلۡأَخِرُ وَٱلظَّـٰهِرُ وَٱلۡبَاطِنُ‌ۖ وَهُوَ بِكُلِّ شَىۡءٍ عَلِيمٌ

அவனே முதலாமவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். (ஸூரா அல்ஹதீது 57:3)

يَعۡلَمُ مَا يَلِجُ فِى ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡہَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيہَاۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلۡغَفُورُ

பூமிக்குள் பதிகின்ற (வித்து முதலிய)வைகளையும், அதிலிருந்து வெளிப்படும் (மரம், செடி முதலிய) இவைகளையும் வானத்திலிருந்து இறங்குபவைகளையும் அதன் பக்கம் ஏறுகின்றவைகளையும் அவன் நன்கறிவான். (ஸூரா ஸபா 34:2)

وَعِندَهُ ۥ مَفَاتِحُ ٱلۡغَيۡبِ لَا يَعۡلَمُهَآ إِلَّا هُوَ‌ۚ وَيَعۡلَمُ مَا فِى ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ‌ۚ وَمَا تَسۡقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعۡلَمُهَا وَلَا حَبَّةٍ۬ فِى ظُلُمَـٰتِ ٱلۡأَرۡضِ وَلَا رَطۡبٍ۬ وَلَا يَابِسٍ إِلَّا فِى كِتَـٰبٍ۬ مُّبِينٍ۬

மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றிலுள்ளவற்)றை, அவனையன்றி வேறெவரும் அறியார். தரையிலும் கடலிலும், உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும். (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (ஸூரா அல்அன்ஆம் 6:59)

وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۚۦ

...அவன் அறியாமல் யாதொரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை... (ஸூரா ஃபாதிர் 35:11)

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ سَبۡعَ سَمَـٰوَٲتٍ۬ وَمِنَ ٱلۡأَرۡضِ مِثۡلَهُنَّ يَتَنَزَّلُ ٱلۡأَمۡرُ بَيۡنَہُنَّ لِتَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىۡءٍ۬ قَدِيرٌ۬ وَأَنَّ ٱللَّهَ قَدۡ أَحَاطَ بِكُلِّ شَىۡءٍ عِلۡمَۢا

அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான், நிச்சமயாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. (ஸூரா அத்தலாக் 65:12)

وَرَبُّكَ يَعۡلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمۡ وَمَا يُعۡلِنُونَ

மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான். (ஸூரா அல்கஸஸ் 28:69)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யா அல்லாஹ்! ஏழு வானங்கள், பூமியின் ரப்பே! மகத்தான அர்ஷின் ரப்பே! எங்களது ரப்பே! ஒவ்வொரு வஸ்துவின் ரப்பே! வித்துக்களையும், தானியங்களையும் உடைப்பவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆனை இறக்கியவனே! உன்னிடம், எனது நஃப்ஸின் தீங்கிலிருந்தும், நீ உச்சி முடியை பிடித்துள்ள ஒவ்வொரு ஊர்ந்து செல்லும் பிராணியின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன். நீயே முதலாமவன். உனக்கு முன்பு எதுவுமில்லை. நீயே முடிவானவன். உனக்கு பின்பு எதுவுமில்லை. நீ வெளிப்படையானவன். உனக்கு மேல் எதுவுமில்லை. நீயே மறைந்தவன். உன்னை விட்டும் (மறைந்தது) எதுவுமில்லை. என் சார்பாக கடன் அனைத்தையும் நிறைவேற்றிவிடு. ஏழ்மையிலிருந்து (இரட்சித்து) என்னை பிறரின் தேவையற்றவனாக ஆக்கிவிடு! (ஸஹீஹ் முஸ்லிம்)

மேற்கூறப்பட்ட சான்றுகள் மூலம் தெரிந்துகொள்வதாவது:
1) அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
2) இப்பிரபஞ்சத்திலுள்ள எந்த ஒன்றும் அவனது அறிவிலிருந்து தப்ப முடியாது.
3) வானங்களில் உள்ளதையும் வானங்களுக்குக் கீழ் உள்ளதையும், பூமிக்கு மேல் உள்ளதையும் பூமிக்கு கீழ் உள்ளதையும், வானம் பூமிக்கு இடையில் உள்ளதையும் அவன் பூரணமாக அறிந்தே இருக்கின்றான்.

العقيدة الواسطية
شيخ الإسلام ابن تيمية

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மண்ணறை

நபி(ஸல்) கூறினார்கள்: மனிதன் மண்ணறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையைக் கேட்பான். இரு மலக்குகள் அவனை உட்காரவைத்து(ஒரு மனிதரைக் காண்பித்து) இம் மனித ரைப்பற்றி நீ என்ன கூறிக்கொண்டிருந்தாய்? என அவனிடம் கேட்பார்கள். ஒரு முஃமின் இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதருமாவார் என நான் சாட்சி கூறினேன் என்று கூறுவான். நரகத்தில் உனது இருப்பிடத்தைப் பார். இதற்குப் பகரமாக சுவர்க்கத்தில் ஒரு இருப்பிடத்தை அல்லாஹ் உனக்கு ஏற்படுத்தி விட்டான் என அவனிடம் கூறப்படும்;. அவ்விரண்டையும் அவன் பார்ப்பான். ஒரு காஃபிர் அல்லது நயவஞ்சகனிடம் இம்மனிதரைப்பற்றி நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? எனக் கேட்கப்படும் அதற்கவன் எனக்குத் தெரியாது மக்கள் கூறியதைக் கூறிக்கொண்டிருந்தேன் எனக் கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவுமில்லை பின்பற்றவுமில்லை எனக் கூறப்படும். பிறகு அவன் இரும்புச் சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படுவான். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள்.(நஸயீ)

மண்ணறையில் உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படுவது உலகில் மனித அறிவு விளங்கிக் கொள்ள முடியாத மறுமை விஷயமாகும். மனிதன் மண்ணறையில் நற்பாக்கியத்திற்குத் தகுதியானவனாக இருந்தால் நற்பாக்கியம் வழங்கப்படுவான். வேதனைக்குத் தகுதியானவனாகயிருந்தால் வேதனை செய்யப்படுவான்

அல்லாஹ் கூறுகிறான்: காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பு முன் கொண்டு வரப்படுவார்கள். மேலும் மறுமைநாள் வந்துவிடும்போது ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும்.(40:46) மண்ணறை வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

தெளிவான அறிவு மண்ணறை வேதனையை மறுக்காது. காரணம் இதுபோன்ற நிலையை மனிதன்; தன் வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறான். உதாரணமாக தூங்கக் கூடிய ஒருவன் கனவில் கடினமாக வேதனை செய்யப்படுவதாக உணர்ந்து சப்தமிடுகிறான் உதவியும் தேடுகிறான். ஆனால் அவனுக்கருகில் இருப்பவன் இதை உணர்வதில்லை. உயிரோடு உறங்கக்கூடியவனுடைய வேதனையையே அருகிலிருப்பவன் உணர முடியவில்லை என்பது போல மரணித்தவனின் மண்ணறை வேதனையை உயிருள்ளவன் நேரடியாக உணரமுடியாது. மண்ணறை வேதனை உடலுக்கும் உயிருக்கும் சேர்ந்ததேயாகும்.

நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறை மறுமையின் தங்குமிடங்களில் ஆரம்ப இடமாகும். இதிலிருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்று விட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட மிகக் கடினமானதாகும். எனவே மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புத்; தேடுவது அவசியமாகும். குறிப்பாக தொழுகையில் ஸலாம் கொடுப்பதற்கு முன் பாதுகாவல் தேடுவது அவசியமாகும்.


இவ்வாறே நரகத்திலும் மண்ணறையிலும் வேதனை செய்யப்படுவதன் முதற்காரணமான பாவங்களிலிருந்து தூரமாகுவதற்கு முயல வேண்டும். இதற்கு மண்ணறை வேதனையென சொல்லப்படுவதற்குரிய காரணம் பெரும்பாலும் மக்கள் மண்ணறையில்தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதாகும். ஆனால் தண்ணீரில் மூழ்கியவர்கள் நெருப்பில் எரிந்துபோனவர்கள் மிருகங்களால் தின்னப்பட்டவர்கள் இன்னும் இதுபோன்றவர்கள் திரைமறைவான வாழ்க்கையில் வேதனை செய்யப்படுவார்கள் அல்லது நற்பாக்கியம் வழங்கப்படுவார்கள்.

மண்ணறை வேதனை என்பது இரும்பாலான அல்லது வேறு ஏதாவது சம்மட்டியலால் அடிக்கப்படுவது அல்லது இறந்தவரின் விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும் அளவிற்கு நெருக்கப்படுவது மண்ணறையில் இருள் நிரப்பப்படுவது நெருப்பாலான விரிப்பு விரிக்கப்படுவது நரகிலிந்து ஒரு வாசல் திறந்து வைக்கப்படுவது அவனின் தீய செயல்கள் துர்நாற்றமுள்ள அருவருப்பான முகமுடைய மனிதன் போன்று உருவெடுத்து அவனுடன் அமர்ந்திருப்பது இப்படிப் பல வகைகள் உள்ளன.

அடியான் காஃபிராகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் வேதனை நிரந்தரமாக இருக்கும். பாவியான முஃமினாக இருந்தால் அவனது பாவம் அளவிற்கு வேதனை மாறுபாடும். சிலசமயம் வேதனை நிறுத்தப்படும். ஆனால் முஃமின்; மண்ணறையில் அருள்பாலிக்கப்படுவான். அதாவது அவனது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளி நிரப்பப்படும். சுவர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அதன் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். சுவர்க்கத்தின் விரிப்பு விரிக்கப்படும். அவனது நற்செயல் அழகிய மனித வடிவில் உருவெடுத்து மண்ண றையில் அவனை மகிழ்விக்கும்.

வியாழன், 16 செப்டம்பர், 2010

அழிவுப் பாதையின் உச்சக்கட்டத்தில்

மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக - அறிவியல் - அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.

ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் - அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும் - திரைப்படங்களும் - ஆடல் பாடல் - கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தான் முன்னணி வகிக்கின்றன. யுக முடிவுக் காலம் வருவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலகம் அதை எந்தளவுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.

ஆம்! இந்த தொலைக்காட்சிகளின் ஜீவ நாடி திரைப்பட உலகம் இதன்மூலம் உருவாக்கப்படும் படங்கள் - நடிகர்கள் - நடிகைகளின் வாழ்க்கை மக்களை எந்தளவுக்கு அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது? தினமும் செய்தித்தாள்களை புரட்டினால் காதல் ஜோடி ஓட்டம் - காதல் ஜோடி தற்கொலை, கள்ளக்காதலர்களின் காமக் களியாட்டங்கள் - வயது வரம்பு தாண்டி காம வெறிக்கு பலியாகும் மாணவர் - இளைஞர்கள்; பணம் செலவுக்கில்லையென்றால் கொலை - கொள்ளை இதுவெல்லாம் யார் கற்றுத் தந்த பாடம்? சினிமா தவிர வேறு யார் இதை இவ்வளவு (கேவலமாக) - வேகமாக கற்றுத் தரமுடியும். காசிற்காக சினிமாவில் நடிக்கும் இவர்கள் நிஜமாக வாழ்பவர்களுக்கு எதைக் கற்றுத் தரமுடியும்? இதைத்தான் நிஜத்தில் மூட்டை தூக்குபவர்களுக்கு கூலி பத்து ரூபாய் என்றால் மூட்டை தூக்குபவதைப் போல் நடிப்பவர்களுக்கு கூலி கோடி ரூபாய். இவர்களை இனம் காட்ட இவர்களின் வாழ்க்கை - குடும்பத்தைப் பாருங்கள். விரல்விட்டு எண்ணிப் பாருங்கள். எத்தனை நடிகர் - நடிகை கைப்பிடித்த ஒரே கணவன் - மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். எத்தனை நடிகர் - நடிகைகள் லஞ்ச லாவண்யம் பற்றி பேசுபவர்கள் - அதைத் தவறு என்று கூப்பாடு போடுவார்கள் - வெறுமனே தாங்கள் நடிப்பதற்காக லட்சக்கணக்கில் - கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்களே? அதில் எத்தனை பேர் சரியாக வரிகட்டுகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்கள்(?) கறுப்பு பணம் வாங்காமல் - மது அருந்தாமல் - விபச்சாரம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? யார்? என்று யாராவது காட்டினால் தெரிந்து கொள்ளலாம். ஆக அழிவுப் பாதையின் திறவுகோலாக அவதரித்துள்ள ஒவ்வொரு மொழியின் - நாட்டின் திரையுலகில் இப்படித்தான் என்பதை யாராவது மறுப்பவர்கள் உண்டா?

திரையுலகம் இப்படி என்றால் சின்னத்திரையுலகம் அழிவுப் பாதையில் ஊன்றுகோளாக உருவெடுத்து விட்டது. ஆபாசங்களை அருவெறுப்பாக கருதாமல் அதை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு சேனல்களும் நீயா - நானா? என்று போட்டியில் உள்ளன. எத்தனைப் போர்க்குரல்கள் எழுப்பப்பட்டாலும் அதனைக் கண்டு அஞ்சும் மனநிலையில் எந்த T.V. சேனலும் இல்லை. இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசாங்கம் தமிழில் பேர் வை; உனக்கு வரிச்சலுகை என்கிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கும் - ஒரே ஒரு சணடை காட்சிக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரி வெறும் ஊறுகாய் மாதிரிதான். எல்லா மொழிக்காரர்களும் ஒருவேளை அரசாணை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அந்தந்த மொழி வெறி அவரவர்களுக்கு.

அரை குறை ஆடையுடன் என்ன? அதுவும் இல்லாமல் காட்சி தர நான் ரெடி: படம் பிடிக்க - ஒளிபரப்ப யார் ரெடி? என்று சினிமா விபச்சாரிகள் கேட்கின்றனர். சினிமாத் துறையையும் - சின்னத்திரை எனப்படும் T.V. சேனல்களையும் தாண்டி மக்களை அழிவின் பக்கம் அடைப்பவர்கள் செய்தித்தாள்கள் மூலம் T.V. க்கு விளம்பரம்; T.V. யை ஒரு முறை பார்ப்பதைவிட செய்தித்தாளை பத்திரப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வார்களே! அதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டையும் ஒருங்கேப் பெற்றுள்ளன. அதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் - தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. அப்புறமென்ன தேசிய வார இதழ்- நாளிதழ் - குடும்ப, வார இதழ் என்று A சர்டிபிகேட் இல்லாமல் கவர்ச்சிப் படங்களை சென்சார் செய்யாமல் வெளியிடும் தைரியம் இந்த குடும்ப(?) இதழ்களுக்குச் சாரும். ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரும் தினப்பத்திரிகைகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும். கூச்சப்பட வேண்டி நம்மை நெகிழச் செய்யும் படங்கள் - செய்திகள் தான் எத்தனை எத்தனை? யார் கொடுத்தது இந்த குடும்ப - தேசிய சர்டிபிகேட்,

சீர்கெடுக்கும் சேனல்களுக்கு பண மழை பெய்ய வறட்சி ஏதும் இல்லை. பணம் வெள்ளமும் - பணப் புயலும் போங்கள். நல்ல அமோக விளைச்சல். அதை சாகுபடி செய்ய மடையர்களாய் மக்கள். T.V. யில் வியாபாரம் இல்லாத எந்தப் பொருளையும் யாரும் வாங்காத நிலை அளவுக்கு தயிர் சாதத்திலிருந்து ஊறுகாய், பால், பவுடர், ஷேம்பு, சோப்பு, பிளேடு, அரிசி - எண்ணை - மாவு முதலி இரு சக்கர வாகனங்களிலிருந்து 4 சக்கர வாகனங்கள் வரை எந்த விளம்பரத்தை யார்தான் விட்டு வைத்தார்கள்? - சலூன் கடைக்கு மட்டும்தான் விளம்பரம் இல்லை. எல்லாம் T.V. மயம்; இல்லை இல்லை எல்லாம் T.V. மாயம்.

இந்த மூன்றைத் தவிர அடுத்ததாய் மக்களை அழிவின்பால் அறைகூவல் விடுவதாக செல்போன்கள் தயாராகிவிட்டன. பாமரர்களையும் விட்டுவைக்காமல் இந்த செல்போன் சூறாவளி செல் நிறுவனங்களால் சலுகை - மலிவு என்ற கோரப்பிடியில் மக்கள் ஆட்படுத்தப்படுத்தப்படுகின்றனர். பள்ளி- கல்லூரி காலங்களில் கைக்கடியாரம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரியாமலிருந்த மக்களுக்கு விஞ்ஞானம் - கம்பியூட்டருக்குப்பின் தயாரித்தது தான் செல்ஃபோன். எல்லா தரப்பினரையும் பதம்பார்த்து அழிவின் அடித்தளமாக செல்ஃபூன்கள் விளங்குவதை யாரும் மறுக்க இயலாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் நீலப்படங்களைக் கூட இதில் பார்க்கும் வசதியும் உண்டு.

பெரிதான் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தால் கண் கெட்டுவிடும் என்று சொன்னார்கள் - அதையும் தாண்டி புனிதமாக சிறிதே - சிறிதான் இந்த செல்போன்களில் இன்டர்நெட் இணைப்புடன் - F.M. T.V. தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்படியென்றால் அதையே உற்றுநோக்கி - இயக்குவதாலும் - படம் பார்ப்பதாலும் கண் என்ன ஆகும் என்று மெய்ஞானம் தான் பதில் சொல்லவேண்டும்.

ஆச்சரியப்பட வேண்டிய விஞ்ஞான விஷயங்கள் ஆபாச அரங்கேற்றங்களால் கைச்சேதப்பட வைக்கின்றன. எவ்வளவு கஷ்டப்பட்டு முதல் தயாரிப்பை ஒருவன் கண்டுப்பிடித்தவுடனேயே அதைப் போன்ற - அதனைவிட பன்மடங்கு வசதிகளுடன் அடுத்தடுத்தவர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஒருவர் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவே செல்போன்கள் தயாரிக்கப்ட்டன. ஆனால் இன்று அதன் நிலையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

அடுத்தபடியாக காமக் களியாட்டங்கள் அரங்கேறும் இடங்களாக சுற்றலாத்தளங்கள். பார்க்குகள் - பீச்சுகள் இடம் பெறுகின்றன. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண சுற்றுலாத் தளங்களில் எங்கேயாவது ஒரு காதல் ஜோடியை பார்ப்பது அதிசயம்; அதுவும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறங்களில் பயந்து பயந்து பேசிக் கொள்வதை நாம் கண்டோம். ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பஸ்களில் - பஸ் நிறுத்தங்களில் ஆரம்பித்து பார்க் - பீச்சுகளில் மற்றும் பொது இடங்களிலும் கூட காதல் - காம லீலைகள ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து என்று ஆரம்பித்து எழுதக் கூசும் அசிங்கங்கள் நடக்கின்றன. இப்போது நடுநிலையாளர்கள் ஆள் அரவமற்ற இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் அவலம் உள்ளது. எனவே இது போன்ற எல்லா அசிங்கங்களுக்கும் மூலகாரணம் சாட்சாத் இந்த சின்னத் திரையும் - திரை உலகமும் தான். இதனைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. வீடு தேடி வரும் இந்த சேலை இந்த அழிவை எதிர்பார்க்கும் உலகத்திற்குத் தேவையா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாரும் எல்லாமும் பெற அன்பு மட்டுமே போதாது நல்லறிவும் வேண்டும். நல்லறிவும் நம் வீடு தேடி வரும்; வீடு தேடி என்ன நல்ல உள்ளங்களை தேடி நாடி வரும்; அழிவே வீடு தேடி வரும்போது அறிவு வீடு தேடி வராதா என்ன? எனவே உள்ளங்களை சுத்தமாக்கிட நற்போதனை சார்ந்த அறிவை வரவேற்பதை ஒவ்வொரு தனிப்பட்ட மனிதவும் கடமையாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உலகை நீக்கமற இயக்கிக்கொண்டிருக்கும் இறைவன் அருளிய மார்க்கத்தில் இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி நாம் ஒவ்வொருவரும் நற்பண்புகளை அடைந்திட முயலவேண்டும். இஸ்லாத்தில் இல்லாத மனித நேயம் - சகோதரத்துவம் - மனிதன் மனிதனாக வாழக்கூடிய வழிமுறை வேறெங்கும் இல்லை என்பதை நாம் சொல்லி அல்ல. ஒவ்வொருவரும் படித்து, கேட்டு, உணரவே வலியுறுத்துகிறோம். ஏனெனில் அல்லாஹ்வை அஞ்சக் கூடிய விதத்தில் அஞ்சி முஸ்லிம்களாகவே அன்றி மரணித்து விடாதீர்கள் என்று (3:102) அல்குர்ஆன் கூறுகிறது. அல்குர்ஆனை ஏன் இங்கு விளக்க விளைகிறோம் என்றால் அல்குர்ஆன் கூறுகிறது.இதோ (நபியே) இந்நெறி நூலிலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக: நிச்சயமாக தொழுகை மனிதரை மானக் கேடானவற்றையும் - தீமையை விட்டும் விலக்கும். நிச்சயமாக இறைவனின் தியானம் (திக்ரு) மிகவும் பெரிதான சக்தியாகும். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிபவன் (29:45). நபியவர்கள் சொல்வதை பாருங்கள். எவர் தன் இரு தொடைகளுக்கிடையில் இருப்பதையும் காத்துக் கொண்டாரோ அவர் சுவர்க்கம் புகுவார். (ஆதாரம் - புகாரி) மேலும் எவர் அந்நியப் பெண்களிடம் தன் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். எனவே பார்வை ஒன்றே போதுமே என்ற போக்கில் அனைத்துப் பாவங்களுக்கும் பார்வையை முதலீட்டாக்கி நாம் செய்யும் ஒவ்வொரு அடுத்தடுத்த தவறுகளையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஓரினச் சேர்க்கையிலும் - விபச்சாரத்திலும், மதுவிலும் - சூதிலும் இருக்கும் இன்பத்தை விட நரகத்தில் கொடுமை அதிகம் என்பதை பயந்து நற்பேறுகளை அடைய இஸ்லாமே அருமருந்து என்பதை உளப்பூர்வமாக உணர்வுப்பூர்வமாக ஏற்று - இறைவனுக்கு பயந்து இவ்வுலகில் தடுக்கப்பட்ட சிற்றின்பங்களை துறந்து - மறு உலகில் கிடைக்கும் பேரின்பங்களை அடைந்திட எல்லோரும் முன்வர வேண்டும். நல்லதை பார்த்து, நல்லதைக் கேட்டு - நல்லதைப் பேசி, நல்லதையேச் செய்யும் நன்மக்களாக இறைவன் நம்மை ஆக்கி அருள் புரிவானாக. ஏதோ பெயரளவில் முஸ்லிமாக இருந்தோம் - வாழ்ந்தும் - மடிந்தோம் என்றில்லாமல் அல்லாஹ் சொல்வது போல் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து முஸ்லிமாகவே மரணிக்கும் நற்பேற்றை நாம் அடைவோம்.

பொழுது போக்கும் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் உலாவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதை விட நம்மை நாமே பழுது பார்த்துக் கொள்ள ஒவ்வொரு நொடித் துளியையும் பயன்படுத்திக்கொண்டு பண்படுவோம். அதன் மூலம் இன்புறுவோம். உலகில் எல்லாவற்றையும் துறந்து விடச்சொல்லி இறைவன் சொல்லவில்லை. குடும்பம் - வீடு - வாசல் - தர்மம் - ஆட்சி அதிகாரம் அனைத்திலும் என்னதான் விஞ்ஞானங்கள் வந்தாலும் மெய்ஞானத்தால் இஸ்லாம் கூறும் வழிமுறைகளை அறிந்துணர்ந்து நடப்போமானல் எந்த விபரீதங்களையும் இறைவன் அருளால் எதிர்கொள்ள முடியும். இறைவன் போதுமானவன்